அழகிய பாத்திரம்
இரண்டு அணுகுண்டுகளை மார்பில் வாங்கிய குட்டித் தீவான ஜப்பான் நாட்டில் ஒரு வினோதமான பழக்கவழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெகு நாட்களாகப் பாதுகாத்து வந்த விலையுர்ந்த பொருட்களோ அல்லது மேசையோ அல்லது கிண்ணமோ திடிரென்று உடைந்தால் அதை தூக்கியெறியாமல், உடைக்கப்பட்ட இடங்களில் தங்க முலாம் பூசி அதனைப் புதுப்பிக்கின்றனர் என்ற தகவலை வளையொலி தேடலின் மூலமாக தெரிந்து கொண்டேன். இந்த காணொளியினை கண்ட பின் மனதில் ஆயிரம் கேள்விகள். இதே போன்ற சம்பவம் நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். ஏன்? நானே கண்ணாடிப் பொருட்களை கையாளும் போது பலமுறை உடைத்திருக்கிறேன். அந்த ஒரு விபத்து நடந்தால் இரண்டே வழிமுறைகளைச் செய்திருப்போம். ஒன்று, ஏதேனும் பசையைக் கொண்டு சரி செய்ய முயல்வோம் அல்லது குப்பைத் தொட்டிக்கு இடம் மாற்றி இருப்போம். இது எப்படி சாத்தியமாகும்? என்று தேடல் பொறியின் மூலம் இணையதளத்தில் தேடி பார்த்தேன்
Photo Source : Lakeside Pottery
ஒரு பொருள் சேதத்திற்கு உள்ளாக கடந்து சென்று மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வரும்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட விரிசல்கள் தங்க முலாம் பூசப்பட்டு மாறாத அழகான தழும்புகளாக ஜொலிக்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் அந்த பொருளினைப் பார்க்கும் போது இறந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை முலாமின் வாயிலாக மறக்கச் செய்து பொருளின் தரம் உயர்த்தப்பட்டு வரலாற்றுச் சின்னம் போல் காட்சியளிக்கிறது. மேலும் அது முன்னர் இருந்த நிலையை விட உறுதியாகவும் , அலமாரியில் வைக்கக் கூடிய அலங்காரப் பாத்திரமாகவும் மாறுகிறது.
தெரிந்து எடுக்கப்பட்ட மண்
ஒரு குயவன் எப்போதும் ஒரே மாதிரியான மண்பாண்டங்களைச் செய்வதில்லை. ஒவ்வொன்றையும் வனையும் போதும் அதனுடைய தனித்துவமான பயன்பாட்டை மனதில் வைத்துக் கொண்டே உருவாக்குவார். அவ்வாறு வனையும் போது பல்வேறு நிலைகளில் களிமண் பயணித்து ஒரு பயன்படத்தக்க பாத்திரமாக உருமாறும். நாமும் கூட களிமண் தான், மன்னிக்கவும் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளது போல மண் மட்டும் தான். கடவுள் இந்த மண்ணை எடுத்து ஒரு குயவனை போல் தமது சாயலாக வனைந்து உருவாக்கினார். படைக்கப்பட்ட நோக்கத்தினை அறிந்து அந்த சாதாரண மண் பாத்திரங்கள் செயல்படுவது போல "ஆண்டுகொள்ளுங்கள்" என்று படைக்கப்பட்ட நாமும் கூட அவர் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமன்றி வேறு எதற்காகவுமில்லை.
அன்று கர்த்தர் எரேமியாவிற்கு உரைத்தது போல “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே நான் உன்னை அறிவேன். நீ பிறப்பதற்கு முன்பு உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்(எரேமியா 1:5)" என்று கூறினார். ஆம் ! நாமும் கூட ஓர் உன்னத நற்செய்திப் பணிக்கென்று அழைக்கப்பட்டிருக்கிறோம். "இயேசு ஒருவரே நித்திய வாழ்விற்கு செல்லும் வாசல். அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். நமது குற்றங்களுக்காக அடிக்கப்பட்டு , நொறுக்கப்பட்டு, குருதி சிந்தி சிலுவையில் தொங்கிய பரிகாரி" என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
சொப்பனக்காரன்
விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை காணலாம். நமக்கெல்லாம் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் என்றவுடன் சட்டென்று நினைவிற்கு வருவது தாவீது தான். அனால் இங்கு சொப்பனக்காரன் ஒருவன், சகோதரரோட ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன்(ஆதி 37:2) வேற்று நாட்டிற்கு கண்காணியானான். அடிமையாய்ப் போனவன் எகிப்து தேசத்து அதிபதியானான். ஆம், யோசேப்பைக் குறித்து தான் பார்க்கப் போகிறோம். நமக்கு நல்ல பரிட்சயமான பகுதி. தன்னுடைய 17 வயதிலே, தான் கண்ட கனவுகளை சகோதரர்களிடம் தெரிவிக்கும் போது இவன் மீது கோபம் கொண்டு பகைக்கிறார்கள். மீண்டும் கனவுகளைக் குறித்து உடன்பிறப்புகளிடமும் தகப்பனாகிய யாக்கோபிடம் தெரிவிக்கும்போது "நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ?" (ஆதி 37:10) என்று கடிந்து கொள்கிறார்.
ஒருவேளை ஆரம்ப காலத்தில் அவனுடைய முதிர்ச்சியின்மை காரணமாக அவனுடைய சொப்பனங்களைக் குறித்து மேன்மை பாராட்டிருக்கலாம். கனவுகளுக்கு குடும்பத்தில் மதிப்பளிக்காமல் வெறுத்துத் தள்ளும்போது மனம் சோர்ந்து போயிருக்கலாம். விலையுர்ந்த ஆடையைக் கழற்றி, உணவு கொண்டு வந்த இடத்தில் உறவுகளை இழந்து வழிப்போக்கரிடம் விற்கப்படும்போது, ஏன் பிறந்தோம்? என்று நினைத்து அழுதிருக்கலாம். சிறியவன் என்பதால் செல்வச் செழிப்போடும், செல்லத்தோடும், சுகபோகத்தோடும் வாழ்ந்தவனுக்கு சிறைச்சாலை வாசம் தன் சிரசினை கொய்து விடுமோ? என்று அச்சதோடு வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, பானபாத்திரக்காரனின் மூலமாக எண்ணிய அவன் முயற்சிகள் இரண்டு ஆண்டுகள் பகல் கனவாய் சென்றதை நினைத்து நொந்து சோர்ந்துபோயிருக்கலாம்.
நான் என்ன தவறு செய்தேன்?
கனவு கண்டது குற்றமா?
சகோதரர்கள் தவறு செய்யும் போது தகப்பனிடம் கூறியது குற்றமா?
விபச்சாரத்திற்கு விலகி ஓடியது குற்றமா?
என்ற அவனுடைய எண்ண ஓட்டங்களை நம்மால் அறியமுடிகிறது. அவனுடைய 30 ஆம் வயது வரை அவன் அனுபவித்து வந்த துன்பங்கள் அநேகம். உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் , மனம் நொறுக்கப்படும் போதும், அவதூறு சுமத்தப்பட்ட போதும், ஏமாற்றப்பட்ட போதும் என பல நிலைகளில் சிக்குண்டு தவித்திருந்தான். ஆனால் வசனம் திட்டவும் தெளிவுமாகக் கூறுகிறது "கர்த்தர் யோசேப்போடே இருந்தார்"(ஆதி 39:2). தேவன் அவனுள் வாசமாயிருந்தபடியால் எண்ணற்ற பிரச்சனைகளின் மத்தியில் புடமிடப்பட்ட விசேஷ பாத்திரமாக இருந்தான். பார்வோன் அவனை அழைத்து சொப்பனத்திற்கு விளக்கம் கேட்கப்படும் போது கூட "விளக்கம் சொன்னால் என்னை விடுதலை செய்வீர்களா?" என்று கேட்காமல், "என்னால் அல்ல தேவனாலே உமக்கு பதில் கூற இயலும்" என்று சொல்லி தேவனை அந்நிய தேசத்திலே மகிமைப்படுத்தினான். "தேவனுடைய ஆவி அவனிலிருப்பதை பார்க்கிறேன்"என்று பார்வோன் கூறுகிறார். பிற்பாடு உயர்ந்த இடத்திலே மின்னும் பாத்திரமாக யோசேப்பு விளங்கினான். பூமியில் வாழ்ந்த 110 ஆண்டுகளில், 70 ஆண்டுகள் களிப்புள்ள நாட்களாக தேவன் மாற்றினார்.
புடமிடப்பட்டப் பாத்திரம்
அந்தி சாயும் வேளையிலே எங்கள் ஊரின் ஆலயத்தின் வழிபாட்டில் பங்குபெறும் போது பழைய கீர்த்தனைப் பாடல்கள் பலவற்றைப் பாடுவர். அவ்வாறான ஒரு பழைய பாடல் என் நினைவிற்கு வருகிறது .
எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனை தீதுகளோ? – எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
மானிடனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாடு அனுபவிப்பது நிச்சயம். அனுதின வாழ்க்கையில் உறவுகளில் விரிசல் ஏற்படும் போதும், வியாதிப்படும்போதும், துன்பப்படும்போதும், வெறுக்கப்படும் போதும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படும் போதும், பாவத்தில் சிக்கி உழலும் போதும், சுக்குநூறாக சிதறுண்டு போகிறோம். அந்த யோசேப்பைப் போல நாம் அவரது கரங்களில் அர்ப்பணிக்கும் போது , இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திருரத்தத்தின் மூலம் நமக்கு ஏற்பட்ட விரிசல்களை அல்லது உடைந்த துகள்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியான, சவால்களை சந்திக்கக்கூடிய, பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை அவருக்கு சித்தமானதை செய்யப் பொன்னால் புடமிடப்பட்ட பாத்திரமாக வனைந்து உருவாக்குவார்.
இறைவன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது ஒரே விதமான தாலந்துகளைக் கொண்டு படைப்பதில்லை. சிலருக்கு மனக்குறைவுகளோ அல்லது உடல் குறைவுகளோ இருப்பதுண்டு. பவுல் 2 கொரிந்தியர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அந்த முள் அவரை உயர்த்தவிடாமல் குத்துகிறது. பலவீனத்தில தேவனுடைய பலன் பூரணமாய் என்னை விளங்கப்பண்ணுகிறது என்று கூறுகிறார்.
நாமும் கூட குறைகளைக் களைந்து, சோர்வுகளை எடுத்தெறிந்து
இவனோடு தேவன் வாசம் பண்ணுகிறார்.
இவனில் தேவ ஆவியானவர் இருக்கிறார்.
என்று மற்றவர்கள் சாட்சி பகிரும்படியான பொன்னால் புடமிட்டப் பாத்திரமாக ஜொலிப்போம்.
ஆமென்.

இந்தப்பதிவு கடவுளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை வெளிப்படுத்துகிறது. இந்த இடத்தில் தங்க முலாம் பூசி அந்தப் பொருளுக்கு ஒரு உயர்வை கொடுத்த மாதிரி நமது வாழ்விலும் தெய்வம் ஒரு உயர்வை கொடுப்பார் என நம்புவோம். ஆமென்
ReplyDeleteநன்றி. இறைவனுக்கே மகிமை உண்டாவதாக
Deleteஅதிகாலையில் ஒரு தெளிவு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ReplyDeleteKartharukku sthothiram
DeletePraise God 🙏
ReplyDelete