என்ன ஒரு ஆட்டம்
வானளாவிய கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் நட்சத்திரம் போல் ஜொலிக்க, அலை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் சோகத்துடன் இருக்கையில் அமர்ந்திருக்க, காற்று கூட அந்த இடத்திற்கு நுழையாமல் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்திருந்த வேளையில், யாரோ ஒருவன் பற்றவைத்த நெருப்பில் சட்டென்று பிடித்த காட்டுத்தீ போல, ஒவ்வொரு மனிதனின் வாயில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. போற்றுவார் போற்றட்டும் ! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ! என்பதற்கு இணங்க பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மைதானத்திற்கு விளையாட வந்தார் எம். எஸ். தோனி. ஆம், அவர் வந்திருந்த நேரம் அணியானது தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களால் கடைசியாக அனுப்பப்பட்ட ஆயுதம். கைபேசியில் notification வருவது போல, அந்த score board ஒவ்வொரு முறையும் எச்சரித்துக் கொண்டிருந்தது. 6 பந்துகளில் 23 ஓட்டங்கள். கடினமான இலக்கு. "எழில் , டிவி யை off பண்ணிட்டு படுக்க வா ! காலையில highlights பாத்துக்கோ" என்றார் விரக்தியுடன் அப்பா. "அப்பா, கடைசி ஓவர் தான் எப்படியும் தோனி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்" என்றான் நம்பிக்கையுடன் மகன். முதல் மூன்று பந்தில் 7 ரன்கள் . அடுத்த 3 பந்தில் 16 ரன்கள் தேவை. ஆட்டம் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியது. அடுத்த இரண்டு பந்தில் 4, 6 என்று 10 ரன்கள். அரங்கம் முழுதும் மீண்டும் தோனி...... தோனி..... தோனி..... என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர். டிவிற்குள்ளே சென்று விழுந்து விடுவது போல நகத்தைக் கடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் எழில். மக்களின் ஆரவாரம் மேலும் அதிகரிக்க, கடைசி பந்தினை வீசுவதற்கு ஓடி வந்து கொண்டிருந்தார் bowler. பந்து கையிலிருந்து வீசப்பட்ட பின், தோனி வேகமாக மட்டையை சுழற்றி பந்தின் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அடுத்த நொடியிலே எல்லைக்கோட்டிற்கு அப்பால் சென்று பந்து விழுந்தது. 6 ரன்கள் என்று நடுவர் கையில் சைகை காட்ட, வெற்றியைப் பறித்தது தோனியின் அணி. தனக்கு பிடித்தமான அணி வெற்றியடைந்து என்ற பெருமிதத்துடன் படுக்க சென்றான் எழில்.
இது எப்படி சாத்தியம்?
பரபரப்பான, பல மன அழுத்தங்களுக்கு மத்தியில் எவ்வித சலனமும் இன்றி அணியை எவ்வாறு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்?
அம்பினை இலக்கை நோக்கி எய்தும் போது வில்லானது வளைந்து கொடுக்கவில்லை என்றால் நெற்றியடி அடித்தாற்போல் சென்றடையாது. தோனி, இதை இவ்வாறு தான் கடைபிடிக்கிறார். அவர் தான் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே இத்தகைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போது அதை எளிதில் நடைமுறை படுத்துகிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் இலக்கை நோக்கி பயணிக்கும் போது பல்வேறு இன்னல்களை, சவால்களை சந்திக்க நேரிடும். ஜெபத்தினாலும், விசுவாசத்தினாலும் மட்டுமே நாம் நேர்கோட்டுத் திசையில் பயணிக்க இயலும்.
போர்க்களத்தில் ஓர் மேய்ப்பன்
ஊரே போர்க்களமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மூன்று மூத்த சகோதரர்கள் போர்க்களத்தில் அரசனோடு துணை நின்றார்கள். எதிரி நாட்டிலிருந்து ஒருவன் வந்து பாளையத்தின் நடுவே நின்று, "நான் ஜெயித்தால் நீங்கள் எல்லோரும் அடிமை. அதே போல் நீங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் அனைவரும் உங்களுக்கு அடிமை" என்று சவால் விட்டுக்கொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன், தன் தகப்பன் கட்டளையிட்டபடி வறுத்தப் பயரையும், பத்து அப்பங்களையும் எடுத்துக் கொண்டு சகோதரர்களிடம் கொடுத்து நலம் விசாரிக்கப் புறப்பட்டான் தாவீது. அங்கு நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டு " ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதிற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்"( 1 சாமுவேல் 17:26).
என்ன விந்தை! சாப்பாடு கொடுக்கச் சென்றவன் சண்டைக்கு தயாரானான். வயதின் நிமித்தமாக அவனை சண்டைக்கு வேண்டாம் என்று தடுத்த போது சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் என் ஆடுகளைக் ஆபத்திலிருந்து காத்துக் கொண்ட கர்த்தர், இந்த கொடிய பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்.
தாவீதினிடத்தில் காணப்பட்ட இரண்டாவது பண்பு, முற்றிலும் பழக்கமில்லாத ஆயுதங்களை பகட்டிற்காக எடுத்து செல்லாமல் தான் அன்றாடம் பயன்படுத்தி வந்த கூழாங்கற்கள், கவண் போன்றவற்றைக் கொண்டு யுத்தத்திற்கு சென்றான். "கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்"(1 சாமு 17:45),"யுத்தம் கர்த்தருடையது" (1 சாமு 17:47), என்று சொல்லி கல்லை எடுத்து கவணிலே வைத்து சுழற்றி அவன் நெற்றியில் பட எறிந்தான். நெற்றியடி அடித்தான். சிம்மசொப்பனமாக விளங்கிய அந்த 6 முழம் மலை சரிந்து கீழே விழுந்தது. அவனை கொன்று பரிசுகள் பலவற்றை பெற்றான். பின்னாளில் இந்த தாவீது தான், 40 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களை ஆண்டான்.
ஓய்வு நாள் பாடசாலையில் அதிகம் கேட்கப்பட்ட விவிலிய செய்திகளில் இதுவும் ஒன்று. எட்டு பேரில், கர்த்தரால் அபிஷேகம் செய்யப்படுவது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கடைக்குட்டி தாவீது மட்டுமே. "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தை பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார்"( 1 சாமு 16: 7) என்று கர்த்தர் சாமுவேலிடம் கூறினார். ஆம், அவன் ஆடுகளை மேய்த்தாலும் அதை உண்மையும் உத்தமுமாக செய்தான்; கொடிய விலங்குகளிடமிருந்து தன் ஆடுகளைப் பாதுகாக்க கவண் மற்றும் கற்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை பயிற்சி செய்து கொண்டிருப்பான். ஏதோ அதிசயமாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படவில்லை; ஏதோ விபத்தாக கோலியாத்தைக் கொல்லவில்லை. வசனம் கூறுகிறது கர்த்தர் அவனோடு கூட இருக்கிறார் (1 சாமு 16: 18). தாவீதும் சுரமண்டலத்தினாலும், திருப்பாடல்கள் மூலமாகவும் தேவனை துதித்துக் கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்தி நேர்த்தியாக செய்து முடித்தான்.
என்ன சத்தம் அந்த வனாந்திரத்தில்..
இஸ்ரவேலர்கள் மெசியாவிற்காக எதிர்பாத்துக் காத்துக்கொண்டிருந்த காலத்திலே, ராஜா எங்கோ அரண்மனையில் பிறப்பார்! தாவீதை போல் நம்மை ஆட்சி செய்வார் என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்திலே, விரியன் பாம்பு குட்டிகளே! என்று பரிசேயரையும், சதுசேயரையும் வேவு பார்க்க வருவகிறதை கோவத்தோடு எச்சரிக்கிறார், யோவான் ஸ்நானகன். அதிகார வர்க்கத்திலும், பாரம்பரிய சடங்காச்சாரங்களிலும் மூழ்கி திளைத்து நிற்கும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களை சாதாரண ஒட்டக மயிரை தரித்து, காட்டுத் தேனை உண்டு வாழ்கிற யோவானால் எப்படி கேட்க இயலும்?
நீர் யார்? என்று அவர்கள் கேட்ட பொழுது "அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்"(யோவான் 1:20). அவனை நோக்கி வீசப்பட்ட கேள்விக் கணைகள் அனைத்திற்கும் நெத்தியடி அடித்தாற்போல பதில்களைக் கூறிக்கொண்டிருந்தான். ஏசாயா இறைவாக்கினர் உரைத்தபடியே கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள் என்று கூறி வனாந்திரத்தின் கூப்பிடுகிறவனுடைய சத்தமாய் இருக்கிறேன் என்கிறார். மக்கள் அனைவரும் அவரிடத்தில் வந்து திருமுழுக்கு எடுக்க வரும் போது கூட நான் எலியா அல்லது தீர்க்கதரிசி என்று கூறாமல் கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்தார். இறை மைந்தன் இயேசு கிறிஸ்து, யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு கொடுப்பதைக் கண்ட யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து "எல்லோரும் அவரிடத்தில் வந்து திருமுழுக்கு எடுக்கிறார்கள்" என்று முறையிட்ட பொழுது "நான் கிறிஸ்துவல்ல அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்" (யோவான் 3:28) என்றார். மேலும் யோவான் "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" என்றார். இறுதியாக அவர், "சகோதரரின் மனைவியை உனக்கு உரிமையாக்குவது நல்லதல்ல" என்று ஏரோது ராஜாவிடம் உண்மையை தைரியத்தோடு கூறினார். தான் வாழ்ந்த காலத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து முடித்தார்.
தாலந்து
முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி, நாம் செய்கின்ற செயலில் உண்மையோடும், கருத்தோடும், தெய்வபயத்தோடும் செய்ய முயல்வோம். நாம் நேர்மையாக நடக்கும் போது தான் எண்ணற்ற துன்பங்கள், இன்னல்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். ஆனால், நாம் தேவனோடு ஒன்றிணைந்திற்கும் பொழுது நம்முடைய முடிவு சம்பூர்ணமாய் இருக்கும். மற்றவர்கள் நம்மை பரிகசிக்கும் போதும் , இச்சககம் பேசி இகழும் போதும், எதிர்மறையான எண்ணங்களை விதைக்க முயலும் போதும் அனைவருக்கும் நெத்தியடி கொடுக்குமளவுக்கு , நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தாலந்தினை வைத்து தைரியத்தோடும் விசுவாசத்தோடும் செயல்புரியக் கடவோம்.
அவர்களை தோற்கடித்து மகிழ்வதற்காக அல்ல மாறாக மாற்றத்தை ஏற்படுத்தி அன்பின் பாதையில் நடத்துவதற்காக மட்டுமே.
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு,அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6)
தாழ்மை
இரண்டாம் பகுதியில், நாம் முழுவதுமாக பார்க்கக் கூடிய ஓர் நற்பண்பு "தாழ்மை".
- விசித்திரமான தோற்றம்,
- பின்னால் வரப்போகும் துன்பத்திற்கு நீங்கலாக்கி மனந்திரும்புங்கள் என்று வாயிலிருந்து புறப்படுகிற கூர்மையான பேச்சு,
- திரளான மக்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறதான பணி,
- பின் தொடர்ந்து வருகிறதான சீடர்கள் என அனைத்து நிலைகளிலும் மேம்பட்டு இருந்தாலும் நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும் என கூறுகிறார் என்றால் அவருடைய தாழ்மையை என்னவென்று வர்ணிப்பது!
ஆதலால், நமக்கு என்ன ஊழியம் கொடுக்கப்பட்டதோ அதை தேவனுடைய மகிமைக்கென்று செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ReplyDeleteSuperb