பறவைகளின் அரசன்
Pic source: marksmith photography
வீசுகின்ற பெருங்காற்றுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அனைத்து பறவைகளும் அடங்கி இருக்க, ஆஹா! புயல் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மேலெழும்பி மேகக்கூட்டங்களுக்கு ஊடாக சென்று பறக்க துடிக்குமாம் கழுகு.
தனது குஞ்சுகளை குறிப்பிட்ட காலத்தில் மென்மையான கூட்டில் வைத்து பாதுகாத்த பின்னர், சிறிய முட்களைக் கொண்டு மாற்றியமைக்குமாம் தாய் பறவை. அந்த பிஞ்சு உடம்பில் முட்கள் தைக்கும் போது நிலை தடுமாறி கீழே விழும். அச்சமயம் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். கீழே விழுந்து அடிபடப் போகும் குஞ்சுகளை ஆண் கழுகு சென்று தாங்கிப் பிடிக்கும்.
அதுமட்டுமல்லாமல் எதிரிகளிடமிருந்து தன்னையும், தன் முட்டைகளையும் பாதுகாக்க ஆபத்து காலத்தில் கந்தக அமிலத்தை உமிழ்ந்து மற்ற உயிரினங்களைக் கருகச் செய்துவிடும்.
வயது சென்ற காலத்தில், அலகும் வளைந்து , இறக்கைகளும் தடித்து சோர்ந்து இருக்கும்போது, உயரமான மலைப்பகுதிக்குச் சென்று பாறைகளில் மோதி தனது அலகை காயப்படுத்தி உடைக்க முயலும். பின்னர் புதிய அலகு கிடைக்கப்பெற்ற பின், இறக்கைகளை பிய்த்து எடுத்து புதிய இறக்கைகளுக்காக காத்திருக்கும்.
சவால்களை எதிர்கொள்வதிலும்
பக்குவமாக பயிற்சியளிப்பதிலும்
கந்தக அமிலத்தை உமிழ்ந்து கருகச் செய்வதிலும்
புதிய வாழ்விற்கு தன்னை புதுபிப்பதிலும்
என அனைத்து விதங்களிலும் சிறந்து விளங்கும் கழுகு "பறவைகளின் அரசன்" என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த புகைப்படத்தில், ஒரு சிறிய காகம் கழுகின் முதுகில் ஏறி அதன் செட்டையைக் கொத்துகிறது.
யார் பெரியவன்?.
ஆம்! இங்கு யார் பெரியவன்?
முன்னர் கூறிய எல்லா சிறப்பம்சங்களைக் கொண்டு கழுகை பறவைகளின் அரசன் என்றழைப்பதில் தவறில்லை என யூகித்திருந்தால் நமது கூற்று தவறு. அனைத்து விதங்களிலும் காகத்தினை விட கழுகு சிறந்து விளங்கினாலும், அதனோடு சண்டையிட்டு தன் வலிமையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என கருதுகிறது. கழுகுக்கு தெரியும் அது ஒரு தற்காலிகமானது. செட்டைகளை அடித்து உயரே எழும்பி பறக்கும்போது இருந்த இடம் தெரியாமல் காகம் பறந்தோடி விடும். மேலும் அது தான் பயணிக்க வேண்டிய திசையில், செய்கின்ற செயலில் மட்டுமே முழு கவனத்தை செலுத்துகிறது. அதனால் தான் அரசன் என்று என்றழைக்கப்படுகிறது.
நம்முடைய இறை வாழ்வில் கூட அவரது சாயலாக உருவாக்கப்பட்ட நமக்கு இன்னல்கள், துன்பங்கள், வியாதிகள் சில சமயங்களில் நேரிடுவதுண்டு. அவை அனைத்தும் தாற்காலிகமே. சத்துருவானவனால் கொண்டுவரக்கூடிய அனைத்து சோதனைகளிலும் சிக்காமல் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து நம்மக்குள்ளாக வாசம் பண்ணும்போது "விசுவாசம்" எனும் செட்டைகளை விரித்து நித்ய வாழ்வு என்ற வானில் நாமும் பறக்கலாம்.
போட்டி
அது ஒரு மலைப்பகுதி. மூன்று வருஷமாக பஞ்சம் கொடியதாயிருந்தபடியால் போட்டிக்கு தயாராக காலையிலே கூடினர் மக்கள்.
என்ன போட்டி?
யார் பெரிய தெய்வம் என்ற போட்டி ?
பாகால் தெய்வத்தை வணங்குவதாக கூறிய தீர்க்கதரிசிகள் 450 பேருக்கும் , கர்த்தரே உண்மையான தேவன் என முழங்கும் எலியாவிற்குமான போட்டி. இஸ்ரவேல் மக்களை பாவத்தில் வழிநடத்தி பாகால் விக்கிரகத்தை வணங்க வித்திட்ட ஆகாபு ராஜாவிற்கு எலியாவிற்குமான போட்டி ?
இரண்டு பலிபீடம் அமைத்து, விறகுகளை வெட்டி, காளைகளை அதிலே போட்டு எந்த தெய்வம் வானத்திலிருந்து அக்கினியை வெளிப்படுத்தி பட்சித்துப் போடுகிறதோ அதுவே உண்மையான தெய்வம்.
நீங்களே மொதல்ல கூப்பிடுங்க, நெறய பெரு இருக்கீங்க என போட்டியை துவக்கினார் எலியா. பாகால் தீர்க்கதரிசிகள் இரத்தம் வடிய முறையிட்டும் மதியம் வரை ஒரு சின்ன தீப்பொறி கூட வரல. அந்தி சாயும் வேளையிலே எலியா தன்னுடைய பலிபீடத்திற்கு நேராக வந்து பீடத்தை சுற்றி தண்ணீர் ஊற்றி தேவனை நோக்கி (அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். 1 இராஜாக்கள் 18:36-37) விண்ணப்பம் பண்ணினான். வானத்திலிருந்து அக்கினி வந்து பட்சித்து போட்டது, கர்த்தரே உண்மையான தெய்வம் என அறிந்து கொண்டார்கள்.
1:450 கணிதத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறைமையின்படி பார்த்தால் 450 தான் பெரியது என்று எளிதில் கூறலாம். ஆனால் இது கடவுள் போட்டக் கணக்கு. 1 தான் பெரிது. எலியா தனியாக இருந்தாலும் அவனோடு இருந்த கர்த்தர் பெரியவர். பல சூழ்நிலைகளில் தனித்து விடப்பட்டு இருந்தாலும் நம்மோடு தேவன் இருக்கிறார் என்ற நிச்சயத்தை நாம் பற்றிக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் பெரியவன்
இந்த புவியில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமம். அவரின் சாயலாக ஒன்றித்திருக்கிறோம். இதில் நீ பெரியவன்! நான் பெரியவன்! என்று ஆலயத்தில் சண்டையிட்டுக் கொள்கிறோம். பிளவுகளை ஏற்படுத்தி குழப்பங்களை விளைவிக்கிறோம். சாதியின் பெயராலும், சடங்காச்சாரங்களின் பெயராலும், பாகுபாடுகளினாலும் நடக்கும் சம்பவங்கள் ஏராளம். பொறாமையினாலும், தற்புகழ்ச்சியினாலும் முகஸ்துதிகளினாலும், வெறுப்புணர்வுகளைக் கொண்டு நீங்கள் ஒரு சமூகம் , நாங்கள் ஒரு சமூகம் என்று சண்டையிட்டுக் கொள்வது சரியா? யாரை திருப்திப்படுத்துவதற்காக இதை செய்கிறோம்? இப்படிப்பட்ட காரியங்களிலா தேவன் பிரியப்படுகிறார். நிச்சயமாக இல்லை. இதையா இயேசு நம்மிடம் எதிர்பார்த்தார்?
யூத வம்சத்தில் பிறந்த இறைவன் அவர்களை மட்டும் ரட்சிக்கவா வந்தார்?
சாதிகளை கடந்து, ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டைக் களைந்து "அன்பு" எனும் விதையை இப்பூவில் விதைக்கவே வந்தார். மத மாற்றத்திற்காக அல்லாமல் மன மாற்றத்திற்காகவே வந்தார்.
பெரிய அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்ய விழையும் நாம் அந்த எலியா போல, "உம்முடைய வார்த்தையின் படி இந்த காரியங்களைச் செய்தேன் என்று விளங்கப்பண்ணும்" என்று அறிக்கையிட்டது போல தாழ்மையாய் இருக்க கற்றுக்கொள்வோம்.
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.(மத்தேயு 23.12)
கிறிஸ்துவுக்குள் தாழ்மையாய் இருப்போம்!
கிறிஸ்துவுக்குள் பெரிய காரியங்களை செய்வோம்!


இளையவரை அருமையாக உள்ளது
ReplyDeleteநன்றி மூத்தவரே
DeleteAmen.. 😘 PraiSe GoD 💒
ReplyDeleteThank you
Deleteநன்று
ReplyDeleteமிகச்சிறப்பான பதிவு யார் பெரியவன் என்பதற்கு 1 : 450 மகச்சிறப்பான எடுத்துக்காடடு.
கடவுள் உன்னை இன்னும் அதிகமாய் எழுதும்படி ஆசீர்வதிப்பாராக.
"யார் பெரியவன்?" - ஆகச்சிறந்த படைப்பு!
ReplyDeleteகழுகு, காகம்; 1:450 என சகல எடுத்துக்காட்டுகளும், ஒப்புமைகளும் கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
அன்பை விதையாக்கி 'மத' மாற்றத்தையும், 'மன' மாற்றத்தையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது கூடுதல் சிறப்பு.
"சுய பெருமையை பேசுகிறவன் தரித்திரன், தாழ்மையை தரித்துக்கொள்பவனே பெரியவன்" என்ற கருத்து உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்குகிறது, நெஞ்சினில் பசுமரத்தாணியாய் பதிகிறது.!
அருமையான பதிவு மாப்ள. . .
இறைவனுக்கான உங்களது எழுத்துப்பணி தொடர்ந்து சிறக்க, செழிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
இறையாசீர் உங்களை தொடர்ந்து நடத்துவதாக!!!
Good job Alex...congrats dear...♥♥♥
ReplyDelete